Montag, 19. November 2007

நண்பர் ரயாகரனுடன் உலகமயமாதல் விவாதம்

கம்யூனிஸ வார்த்தைகளை போட்டு எழுதப்பட்டிருப்பதால், இந்தகட்டுரையையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறேன்.

//உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை
பி.இரயாகரன்


14.11.2007

நான் எமுதிய 'உலகமயமாதலில் : நவீன அடிமைத்தனங்களின்றி சுதந்திரமான சொர்க்கமில்லை" என்ற புதிய நூல் கீழைக்காற்றின் ஊடாக வெளிவர உள்ளது. அநேகமாக சென்னை புத்தக கண்காட்சியில் பெறமுடியும். இதை நான் நேற்றுத் தான் எழுதி முடித்திருந்தேன். அந்த நூலின் முன்னுரை.

முன்னுரை

நீ மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். இதுவே உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தின் அடிப்படையான இயங்கு விதி. வெளிப்பார்வைக்கு இது உருத்தெரியாத ஒன்றாக உருத்திரிந்து இயங்குகின்றது. தனிமனித சுதந்திரம், தனிமனித தெரிவு, இருப்பதைக் கொண்டு எப்படியும் வாழ்வென்கின்றது. இதுதான், இப்படித்தான் உலகம் என்கின்றது. இதை மாற்ற முடியாது என்கின்றது. இதை இயற்கையானது என்கின்றது. இதையே மனித ஜனநாயகம் என்கின்றது. மனித சுதந்திரம் என்கின்றது. இதன் உள்ளாhந்த சமூக விதியை கற்றுக்கொள்ளாதே என்பதே, இதன் பொருள். //


உலகமயமாதல் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கிவிட்டு, அதன்பின்னே உங்களது விமர்சனத்தை வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

globalization என்னும் உலகமயமாதல் என்பது புதியதான ஒன்றுஅல்ல. ரோமானியர்கள் இந்தியாவின் மிளகை வாங்கிக்கொண்டு சென்றதும், அவர்கள் அதற்கு பதிலாக தங்கமோ அல்லது அவர்களிடம் இருந்த வேறு விதமான பொருட்களையோ கொடுத்ததற்கு முன்னமே இந்த உலகமயமாதல் ஆரம்பித்துவிட்டது. பக்கத்து கிராமத்திடம் உள்ளதை உங்கள் கிராமத்தில் இல்லாததை பக்கத்து கிராமத்திலிருந்து வாங்குவதிலிருந்தே இது ஆரம்பித்துவிட்டது.

இன்று அது வேகமாகவோ அல்லது இன்னும் வலிமையாகவோ ஆகியிருக்கிறது என்று சொல்லலாமே தவிர அது புதிய ஒன்று என்று சொல்ல முடியாது.
அது வேகமாக ஆனதற்கு அடிப்படை நாடுகளிடையே வியாபாரம் அதிகரித்ததுதான். வியாபாரம் என்றாலே ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிப்பதும் மற்றொருவன் துன்பத்தை அனுபவிப்பதும் என்று எப்படி நீங்கள் வரையரை செய்கிறீர்கள்? இதன் உள்ளார்ந்த சமூக விதி என்பதுதான் என்ன? என்னிடமிருப்பதை கொடுத்து என்னிடம் இல்லாததை வாங்குவதுதான் எல்லோரும் செய்வது. அதுதான் வியாபாரம். எனக்கு ஒரு பாடபுத்தகம் வேண்டுமென்றால், நானே அதனை உட்கார்ந்து எழுதி பிறகு அதனை படிக்கமுடியுமா? அதனை வேறொருவர் பலருக்கும் பயன்படும் விதத்தில் பதிப்பித்து வேண்டுபவர் வாங்கலாம் என்றால்தானே நான் போய் வாங்க முடியும்? இதிலென்ன புரியாத சமூக விதி?


//நவீன அடிமைத்தனம் என்பது, இப்படி நுட்பமானது. அது சிந்தனை முறையில் திணிக்கப்படுகின்றது. மனித அறிவியல் தற்குறித்தனத்தை புகுத்துகின்றது. சில பொருட்கள், பொருட்களைப் பற்றி கதைத்தல், நுகர்த்தல் என்ற எல்லைக்குள், மனித அறிவை மலடாக்கி நவீன அடிமைத்தனத்தை வாழ்வியலாக மாற்றிவிடுகின்றது. சமூகம் தன்னைச் சுற்றியுள்ள இந்த வட்டத்தை விட்டு, சுயமாக வெளியில் வரமுடியாது. அந்த வகையில், நவீன ஊடகவியல் மனிதனை தனது சொந்த சிறையில் பாதுகாப்பாக வைத்துள்ளது. //


நவீன ஊடகவியல் மனிதனை சொந்த சிறையில் வைத்துள்ளது என்றால், நீங்கள் புது ஊடகத்தை உருவாக்கலாமே? அவரவர் எழுதும் வசதிக்கென பிளாகும், இணையமும் கொண்டுவந்து மக்களை விடுவித்திருப்பதும் இதே உலகமயமாதலின் விளைவுதானே? அது இல்லையென்றால், எப்படி நீங்கள் எழுதியதை நான் படித்திருக்க முடியும்?

//அது தன்னைத் தானே இழிவுபடுத்துகின்றது. கற்றல், கற்றுக் கொள்ளுதல் என்பது, அறிவற்றவனின் வேலை என்கின்றது. சமூகத்தின் சாரத்தை தெரிந்து கொள்ளுதல், வாழத் தெரியாதவர்களின் முட்டாள்தனம் என்கின்றது. சமூக அவலத்தில் இருந்து சமூகத்தை விடுவிக்க முனைவதும் போராடுவதும், வேலையற்றவர்களின் கண்டுபிடிப்பு என்கின்றது.//


அப்படியா? நிச்சயமாக இல்லை. சொல்லப்போனால், ஏதோ நூலகங்களில் சிறைபட்டுக்கிடந்த கோடிக்கணக்கான புத்தகங்களை விடுதலை செய்து கிராமம் கிராமமாக இருக்கும் இண்டெர்நெட் மையங்களிலும் கிடைக்கும் வழியை செய்தது இந்த உலகமயமாதல்தானே?

//இப்படித்தான் நவீன அடிமைத்தனம் புகுத்தப்பட்டுள்ளது. பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாறிவிடுகின்றான். உணர்வுகளும், உணர்ச்சிகளும் வக்கிரமடைந்து விடுகின்றது. மனிதனோ மனித உணர்ச்சியற்ற, மிருக உணர்ச்சி கொண்ட நுகர்வு வெறியனாகி விடுகின்றான். நான் என்ற எல்லைக்குள், அனைத்தையும் தீர்மானிக்கின்றான். சுயநலமோ அவன் மேல் ஏறி உட்காருகின்றது. அனைத்தையும் இதற்குள்ளாக்கி, இதற்குள்ளாகவே பார்த்து சமூகத்தை இழிவாடுகின்றது. //


நுகர்வு என்பது வெறியா? எதனை தான் நுகரவிரும்புகிறோம் எதனை நாம் நுகர விரும்பவில்லை என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தெரியாதா? நிச்சயம் தெரியும். அவன் அதனை நான் என்ற எல்லைக்குள்மட்டும் செய்யாமல் உலகெங்கும் வாழும் அனைவரும் இந்த அறிவு பரவலில் ஈடுபடவேண்டும் என்றுதான் நூலகங்களில் சிறைப்பட்டுக்கிடந்த புத்தகங்களை விடுவித்தான். மின்னணு தொழில்நுட்ப புரட்சி, கணினி புரட்சியாகி, பின்னர் இங்கு கல்வியை பரவலாக்க முடிந்துள்ளது.

மேலும் நுகர்வு என்பதால்தான் ஒரு பொருளுக்கு மதிப்பு என்பது உருவாகிறது.

//மனித குலத்தின் சொந்த அவலத்தை கண்கொண்டு பார்க்க மறுக்கின்றது. மனிதனுக்கு எதிரான நடத்தையை, தனது வாழ்வுக்கான கூறாக பார்க்கின்றது. இப்படி உலகளவில் மக்களைச் சுரண்டி சூறையாடி வாழ்கின்ற ஒரு வர்க்கத்தின் சொர்க்கம் தான், உலகமயமாதலின் சுபீட்சம். இப்படி உருவாகும் சிலரின் சுபீட்சமோ, சமூக உயிரியான மனிதனுக்கு நரகத்தை உருவாக்குகின்றது. //


இங்கு சுபிட்சம் சிலருக்கானதாக இல்லை. இங்கே பலகோடி மக்கள் சமீபத்தில் 20 ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்குக் கீழிருந்து மத்தியதர வர்க்கமாகவும், ஏன் பணக்காரர்களாகவும் ஆகியிருக்கிறார்கள்.

//நவீன மனித அடிமைத்தனங்களே இன்று உலகமயமாகின்றது. இந்த அடிமைத்தனத்தை நாம் எங்கும் எதிலும் காணமுடியும். மனித அடிமைத்தனம் மீது, மனித இழிவுகள் புகுத்தப்படும் வரைமுறையற்ற தன்மை தான் உலகமயமாதலின் வீக்கம். //


உலகமயமாதல் மனிதனை தனது கிராமத்தின் அழுத்தும் கலாச்சாரத்திலிருந்தும், நகரத்தின் குறுகிய மொழி/இன கலாச்சாரங்களிலிருந்தும் விடுவிக்கிறது. கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு அது தெரியும்.

//உலகளாவில் உழைப்பு உருவாக்கும் சொத்துடமையை, சிலரின் சொத்தாக மாற்றுகின்றனர். அதை பாதுகாக்கும் சிலரின் அதிகாரம் வரை நீண்டு விரிந்தது தான், உலகமயமாதலின் சட்ட ஒழுங்கு. இதற்கு உட்பட்டது தான் அனைத்தும். தனிமனித சுதந்திரம் உட்பட ஜனநாயகம் அனைத்தும் இதற்கு கீழ்பட்டது தான். இதை மீறிய (தனிமனித) சுதந்திரம், ஜனநாயகம் என்று எதுவும், இந்த உலகமயமாதலில் கிடையவே கிடையாது. //


இங்கே சொத்துடமை பரவலாக்கப்படுகிறது. வெறும் நிலத்தை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், ஒருவருக்கு நிலத்துக்கு இருக்கும் தேவை உலகமயமாதலில் வெகுவேகமாக குறைந்துள்ளது. அதனால், நில உடமை பரவலாக்கப்பட்டுள்ளது.

//தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தைச் சார்ந்தது என்பது, சிலரின் வர்க்க நலன்களுடன் தொடர்புடையதாக மாற்றப்பட்டுவிட்டது. முன்பு தனிமனித சுதந்திரம் என்பது ஒரு வர்க்கத்தின் பொது நலன் என்ற மாயை கலைந்து, அதில் உள்ள சிலரின் நலன் என்ற எல்லைக்குள் குவிந்துவிட்டது. விரல்விட்டு எண்ணக் கூடிய சிலருக்காக, உலகம் வேகமாக சுருங்கிச் செல்லுகின்றது. //


இல்லை. எல்லோருக்கும் உலகம் வெகுவேகமாக சுருங்கி வருகிறது. அதனால்தான், தமிழக கிராமத்திலுள்ளவரின் மகன் ஐரோப்பாவில் கணினி பொறியியலாளராக இருக்கமுடிகிறது. அவ்வாறு இருப்பதும், ஒருவரோடு ஒருவர் பேசவும் ஆகும் செலவும் மிகமிக குறைந்து மக்களிடையே நெருக்கமும் அதிகரித்துள்ளது.

//இதனால் கஞ்சிக்கே வழியில்லாத மக்கள் கூட்டத்தின் வயிறோ, மேலும் மேலும் சுருங்கி வருகின்றது. மனித உழைப்பிலான அனைத்து வகை செல்வத்தையும், ஜனநாயகத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் திருடுவதே உலகமயமாதலின் பிழைப்பாகிவிட்டது. //


கடந்த 20 வருடங்களில் 20 சதவீத இந்திய ம்க்கள் வறுமைக்கோட்டிலிருந்து மேலெழுந்து மத்திய தர வர்க்கத்தினராகவும், பணக்காரர்களாகவும் ஆகியுள்ளார்கள். சமீபத்திய ஆய்வுகள், இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக, வறுமை இல்லாத உலகத்தை மிகவும் நெருங்கிவிட்டோம் என்று கூறுகின்றன. ஒரெ விஷயம், இந்தியா தாமதமாக பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டதுதான்.

//இந்த தனிமனித நலன் சார்ந்த ஒழுக்கக்கேட்டை பீற்றிக் கொள்கின்ற வக்கிரம் தான், பண்பாடாக கலாச்சாரமாக புணர்ந்து விடப்படுகின்றது. இந்த உலகமயமாதலில் கதாநாயகர்களின் நுகர்வு வக்கிரங்களை பார்த்தும், கேட்டும் ரசிக்கின்ற ரசிகர் கூட்டமாக, ஒரு கற்பனை உலகில் மக்களை சஞ்சரிக்க கோருகின்றனர். இப்படி மக்கள் கூட்டத்தை அற்ப உணர்வுக்குள் திணிப்பதையும், அதை உணர்வதையும் தான் தனிமனிதனின் சுதந்திர உணர்வு என்கின்றனர்.
இவை எல்லாம் எதற்காக? யாருடைய நலனுக்காக? நிச்சயமாக உழைத்து வாழ்கின்ற மக்களுக்காக அல்ல. இந்த வகையில் உலக பொருளாதாரம் என்பது, தேசிய பொருளாதாரம் முதல் ஒரு தனி மனிதனின் பொருளாதாரம் வரையிலான, அதன் சுயேட்சையை அனுமதிப்பதில்லை. தனிமனிதனின் சுயேட்சை முதல் ஒரு மக்கள் கூட்டத்தின் சுயேட்சையான எந்த செயற்பாட்டையும், அதன் இருப்பையும் தகர்ப்பது தான் உலகமயமாதலின் உட்சாரம்.
அதாவது யாரெல்லாம் செல்வத்தை வரைமுறையின்றி மக்களைத் திருடிக் குவிக்கின்றனரோ, அதற்கேற்ற பொருளாதாரக் கொள்கையே உலகமயமாதல். இதுவே உலகப் பொருளாதாரம். //


செல்வம் என்பது ஒரு நிரந்தர புள்ளி எண் அல்ல. அது ஒருவரிடமிருந்து மற்றொருவர் திருடுவதாலேயே ஒருவரிடமிருந்து மற்றவரிடம் சேர்கிறது என்பதும் அபத்தம்.

//இந்த உலக பொருளாதாரம் என்பது உயர்வான இலாப நோக்கில், அனைத்தையும் சிலரின் தனிச்சொத்தாக்கும் வகையில் திட்டமிட்டப்படுகின்றது. இதற்கு வெளியில் மக்களின் தேவையையும், அவர்களின் அவசியத்தையும் அடிப்படையாக கொண்டு, எவையும் திட்டமிடப்படுவதில்லை. அப்படி எந்த அரசும் கிடையாது. இந்த சமூக அமைப்பில் அதிகாரத்தை பெற விரும்புகின்ற எந்த கட்சியும், எந்த அரசு சாராத அமைப்பிடம் கூட, மக்கள் நலத்திட்டம் எதுவும் கிடையாது. //


ஏதோ உச்சத்தில் உட்கார்ந்துகொண்டு மக்களுக்காக திட்டமிடுவது நிறுத்தப்படவேண்டும். மக்களுக்கு அரசியல் சுதந்திரமும், பொருளாதார சுதந்திரமும் கொடுத்தாலே போதும். மக்கள் அவரவர் தங்களுக்கான வேலைகளை பார்த்துக்கொண்டு போவார்கள். மக்கள்நலதிட்டத்தால்தான் மக்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பது அபத்தம். மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல.

//இவர்களிடம் முதன்மையான (அரசியல்) நோக்கமாக இருப்பது, உலகமயமாதலின் கொழுக்கின்ற வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்தபடி, தாம் எப்படி பிழைப்பது என்பது தான். இந்த உலகமயமாதல் என்ற சமூக அமைப்பை ஏற்றுக்கொள்ளும் அனைவரினதும் அரசியல் நலன்களும் கூட, இதற்கு உட்பட்டதே. மக்கள் நலன் என்பது, இவர்களின் அரசியல் வேலைத்திட்டத்தில் ஒரு அரசியல் கூறாகக் கூட இருப்பதில்லை.//


உலகமயமாதலால் கொழுக்கின்ற வர்க்கம் என்பது நீங்களும் நானும்தான். சற்றே பார்த்தால் தெரியும். மூலதனம் இன்று தேச எல்லைகளை கடக்கிறது. ஜனநாயக விரும்பிகள் உழைப்பாளர்களும் தேச எல்லைகளை கடந்து சென்று உழைப்பு தேவைப்படும் இடத்தில் வேலை செய்ய உரிமைகலை கோரினார்கள். விரும்பியோ விரும்பாமலோ இன்று உலகெங்கும் அதுதான் நடந்துவருகிறது. தேச எல்லைகளை கடந்து மெக்ஸிகோ உழைப்பாளர்கள் அமெரிக்காவில் உழைப்பதும்,அமெரிக்கர்கள் ஐரோப்பாவில் உழைப்பதும், இந்தியர்கள் வளைகுடா, அமெரிக்கா என்று உலகெங்கும் உழைப்பதும் இன்று உலகமயமாதலால்தான் சாத்தியமாகி இருக்கிறது.

//மக்கள் கூட்டத்தை ஏமாற்ற, மக்களை பிரித்தாள முனைகின்றன. அரசியல் ரீதியாக இவர்கள் வைக்கின்ற கோசங்கள் முழக்கங்கள், மனிதன் தன்னை உணராத வகையில் வைக்கப்படுகின்றது. கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கிகளாகத்தான், இந்த சமூக அமைப்பினுள் அரசியல் செய்வோரின் நடத்தைகள் உள்ளன. //


ஆனால், கம்யூனிஸ்டுகள் இன்னும் உலகமயமாதலை எதிர்ப்பதன் மூலம், மக்களை பிரித்தாள முயற்சிக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல, கிறிஸ்துவ அடிபப்டைவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆகியோரும் இவ்வாறு வெளிநாட்டு உழைப்பாளர்களுக்கு உரிமைகள் கொடுக்கக்கூடாது என்று கோஷம் போடுபவர்களாகவும் இருக்கிறார்கள். சீன கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களாகவும், பர்மா போன்ற நாடுகளில் மனித உரிமைகளை நசுக்குபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம்.

//இந்த உலகமயமாதலில் யாரெல்லாம் பொருட்களை வாங்கி நுகரும் வசதியும் வாய்ப்பும் உள்ளனரோ, அவர்களுக்கு மட்டும் உற்பத்தி என்பது உலகமயமாதல் சந்தை விதியாகும்.//


உற்பத்தி என்பது வாங்கி நுகருபவர் மையம் கொண்டதாகவே மனித குலம் தோன்றிய காலம் தொட்டு இருந்து வருகிறது. அதிகமாக ஒரு பொருளை விரும்புபவர்கள் அதிகமாகும்போது அதனை உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்கள் அதிகமாவார்கள். அதிகமாக உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதால், அதிக பொருட்கள் சந்தைக்கு வரும். அதிக பொருட்கள் இருப்பதால், விற்பவர் சந்தை வாங்குபவர் சந்தையாகிறது. தரம் முக்கியத்துவம் பெறுகிறது. பொருள் விலை குறைகிறது.

// பொருட்களை வாங்கி நுகர முடியாத வகையில் சுரண்டப்படும் மனித குலத்தையிட்டு, உலகமயமாதல் சமூக அமைப்பு கவலைப்படுவது கிடையாது. இந்த சமூக அமைப்பை ஏற்றுக்கொண்ட கட்சிகள், கோட்பாடுகள் மற்றும் பொதுநல அமைப்புகள் அனைத்தும், இந்த சந்தை விதியை அனுசரித்து இதற்குள் செயல்படுகின்றது. இதனிடம் எந்த மனித முகமும், சமூக நலனும் இருப்பதில்லை. இது உலகமயமாதல் நோக்கில் நிர்வாணமானது//


பொருட்களை வாங்கி நுகர முடியாத வகைக்கு மனித குலம் மொத்தத்தையும் கொண்டு செல்லவே முடியாது. பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்த பின்னால், வாங்க ஆளில்லையெனில் தானாக விலை குறைகிறது. மக்கள் வாங்க முடியும் அளவுக்கு விலை குறைந்துகொண்டே போகும். தக்காளி உற்பத்தி அதிகமாக ஆகி, பல கோடி டன் கணக்கில் தக்காளி உற்பத்தி செய்துவிட்டு, விலையை 1000 ரூபாய் என்று வைத்து யாரும் வாங்கமுடியாமல் ஆக்குவார்களா? வாங்க முடியாது எனில் விலையை குறைத்துத்தான் ஆகவேண்டும்.

//இந்த உலகமயமாதல் அறிவியல் நோக்கு என்பது, பொருட்களை வாங்க முடியாதவன், பொருள் உலகில் வாழ தகுதியற்றவனாக பார்க்கின்றது. உலகமயமாதல் பொருட்களினாலானது. இலாபமே குறிக்கோளாக கொண்டது. இதற்குள்ளேயே நுகர்வு என்று தீர்மானிக்கின்றது. சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தும் இதற்குள் அடிமையானதே. இதை மீறி பீற்றிக்கொள்ள எதுவும் கிடையாது. அற்ப வக்கிரத்தை கொட்டி, பீற்றுவதையே சுதந்திரம் என்கின்றன. //


லாபம் ஒரு நல்ல குறிக்கோள். லாபமே மேன்மேலும் பொருட்களின் விலையை குறைக்கிறது. பொருட்களின் விலை குறைய குறைய மேன்மேலும் மக்கள் நுகரவும் வாய்ப்பாகிறது.

//மனித பண்பாடு, கலாச்சாரம், கல்வி, மருத்துவம் என எதுவாக இருந்தாலும், உலகமயமாதல் என்ற தனிமனித நலனைச் சார்ந்த சந்தை விதிக்கு உட்பட்டதே. யாரெல்லாம் பணம் கொடுத்து இவற்றை பெறமுடியுமோ, அவர்களுக்கு மட்டுமான ஒரு உலகம் தான் உலகமயமாதல். இதற்கு வாழ வழியற்றவராக்கப்பட்டவர்கள், இந்த உலகமயமாதலில் வாழ முடியாது. //


உலகமயமாதல் தனிநபர் மையம் கொண்டது, அதே நேரத்தில் எல்லா தனிநபர்களையும் மையமாக கொண்டது. ஒரு நபரால் பணம் கொடுத்து பெற முடியும் விஷயம் மற்றவருக்கு தேவையாக இருந்தாலும், அது தற்போது பெற முடியாததாக இருக்கலாம். இதுதான் மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இருந்துவருகிறது. அதிக உற்பத்தி, Automation ஆகியவை பொருளின் விலையை குறைத்துக்கொண்டே போகின்றன. ஒரு காலத்தில் பல கோடி கோடி பெறுமானமாக இருந்த கம்யூட்டர் இன்று காய்கறி விலை அளவு மலிந்தது உலகமயமாதலால்தான் சாத்தியமாயிற்று. இதுவே சிலுக்குவார் பட்டியில் கம்ப்யூட்டர் மையம் தோன்றவும் காரணமாயிற்று.

//இப்படி வாழ முடியாதவர்கள் யார்? உலகமயமாதலில் வாழக் கூடியவன் நுகரும் பொருட்களை, அதன் அடிகட்டுமானங்களை உற்பத்தி செய்பவன் தான். இப்படி வாழ முடியாதவனை உற்பத்திசெய்யும் உலகமயமாதல் என்பது, மனித உழைப்பு அதியுயர் இலாப எல்லைக்குள் வரைமுறையின்றி சுரண்டப்படுவதால் உருவாக்கப்படுகின்றது. உலகமயமாதல் உற்பத்தி செய்பவனுக்கும் கொடுக்கும் அற்ப கூலியில், அவன் உற்பத்தி செய்தவற்றை அவனே நுகர முடியாது போகின்றது. உண்மையில் ஒரு வர்க்கத்தின் நுகர்வுக்குரிய பொருளை உற்பத்தி செய்பவன், அதை நுகர முடியாது பிறிதொரு வர்க்கமாகின்றான். இதனால் மனித வாழ்க்கையே வர்க்கப் போராட்டமாகி விடுகின்றது. //


தவறு. ஒரு இடத்தில் உற்பத்தி செய்பவன் மறு இடத்தில் நுகர்பவனாக இருக்கிறான். நுகர்வதற்கு ஆட்கள் இல்லையேல், சமூகம், கலாச்சாரம், உணவு, சிற்றுண்டி விடுதி, பத்திரிக்கை, இண்டர்நெட், பிளாக் அனைத்தும் தேவையுமில்லை, இருக்கவும் இருக்காது.

--
Standard Disclaimer: ரயாகரனின் இந்த கட்டுரைக்கு மட்டுமே இந்த விமர்சனம். அவரது வேறெந்த கருத்துக்களையும் விமர்சிப்பதாக எடுத்துக்கொள்வது படிப்பவரின் மனநலத்துக்கு ஆபத்தானது.

12 Comments:

Anonym said...

ரயாகரன் எழுதுவது ரயாகரனுக்கே புரியாது. அதனை படித்து அந்த புலம்பல்களுக்கு பதில் எழுதிய உங்களை பாராட்டுகிறேன்.

Anonym said...

நல்ல பதில்கள்

said...

நன்றி ரா
நன்றி அனானி
உங்கள் மறுமொழிகளுக்கு

said...

தியாகுவின் பதிவில் ஒரு அனானி, வெறும் முன்னுரையை மட்டுமே வைத்துநான் விவாதித்துள்ளது தவறு என்று கூறியுள்ளார்.

ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால், இங்கே குறிப்பிட்டுள்ள கேள்விகளின் அடிப்படையிலேயே விவாதத்தை தொடரலாமே

அந்த அனானியே உலகமயமாதல் என்றால் என்ன என்று இங்கே விளக்கலாமே.

விவாதத்தை தொடரலாமே?

Anonym said...

//லாபம் ஒரு நல்ல குறிக்கோள். லாபமே மேன்மேலும் பொருட்களின் விலையை குறைக்கிறது. பொருட்களின் விலை குறைய குறைய மேன்மேலும் மக்கள் நுகரவும் வாய்ப்பாகிறது.
//

So true!

Anonym said...

ஒன்றும் புரியாமல், பொருளாதாரத்தின் பாலபாடம் கூட தெரியாமல் புலம்பும் கம்யூனிஸ்டுகளுக்கு சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்.

நன்றி

Anonym said...

oru plus!

said...

Rayakaran has written a reply for this globalization debate in his blog.


தமிழ்மணத்தில் ஊருகின்ற அட்டைப் புழு தான், பார்ப்பனிய(தமிழ்)மணி என்ற பார்ப்பான் (தமிழரங்கம்) - 3
http://tamilarangam.blogspot.com/2008/02/blog-post_04.html

:-)))))))

said...

He wrote another post..

LOL
:-))

said...

:-)

said...

உலகமயமாதல் என்றால் என்ன?

said...

நண்பர் ரயாகரனிடம் கேட்கவேண்டிய கேள்வி.

அவர் எதற்கும் பதில் சொல்லமாட்டார்.

ஏனென்றால் பதில் தெரியாது.