Montag, 12. November 2007

ஜமாலனுடன் என்னுடைய கம்யூனிஸ விவாதம்

//ஜமாலன் said...
வாக்குப்பொறுக்கி அரசியலின் ஏகப்பிரதிநிதியாகி இந்திய ஓட்டை ஜனநாயகத்தை (பார்க்க தெகல்ஹா) தனது வாத்திறமையால் அடக்க வந்த வாதவூரான் நரியை பரியாக்கி மாணிக்கவாசகத்தின் வாரிசாக.. இங்கும் தனது மாய்மாலங்களைக் காட்ட அல்ல ஆட்ட வந்துள்ள அணாணிகளக்கும் அவர்களக்கு மஞ்சம் விரிக்கும் அஞ்சா நெஞ்சன் அண்ணண் தமிழ்மணி அவர்களுக்கும்.

//

வாக்குப்பொறுக்கி அரசியலில் ஏகப்பிரதிநிதி நானல்ல. இந்தியாவில் ஓட்டுப்போடும் அனைவரும் வாக்குப்பொறுக்கி அரசியலின் பிரதிநிதிகளே.

மற்றபடி, மாய்மாலங்கள்,ஆட்டவருவது, மஞ்சம் விரிப்பது, அஞ்சாநெஞ்சன், அண்ணன் ஆகிய உங்களது வசையாடல்களை நிராகரிக்கிறேன். இவைகள் உங்களது வாதங்கள் அல்ல என்பதால், உதாசீனம் செய்கிறேன்.

//
முதலில் நான் ம.க.இ.க. இல்லை. என்றாலும், ம.க.இ.க.-வின் பிரச்சாரகராக தாங்கள் மீள்பதிவிட்ட பகுதிகளுக்கு பாராட்டுக்கள். இல்லாவிட்டால் அதை நான் படித்திருக்க வாய்ப்பில்லை. நன்றி.
//


எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணவேண்டும் அல்லவா, நன்றி.

//
உங்க பஞ்சாயத்தில் நீங்கள் என்னையும் இழுப்பதால். இந்தமாதிரி ஒன்டே மாட்செல்லாம் பலகாலமா விளையாண்டு வெறுத்த விட்டதால். ஆட்டைக்கு நா போறதில்ல. இருந்தாலும், மாஞ்சு மாஞ்சி வரிக்க வரி எதிர்த்து எழுதப்பட்டுள்ள உங்களின் வாதத்திறமை கண்டு மெச்சியே இது எழுதப்படுகிறது. எல்லா வரிகளின் இறுதியையும் பேசாமல் "இல்லை" என்கிற சொல்லை மட்டும் இணைத்திருந்தாலே எல்லா கட்டுரைகளையும் மறத்துவிடலாம். அது எதுவாக இருந்தாலும். ஆணால் நீங்கள் அப்படி செய்யாமல் மெனக்கெட்டு தட்டச்சு செய்த அந்த விரல்களுக்கு தங்க காப்புதான் போட வேண்டும்.
//


இல்லை நான் உங்களை இழுக்கவில்லை. நீங்கள்தான் முதலில் என் பதிவில் வந்து பதில் எழுதினீர்கள். ஆகவே உரையாடுபவர்கள் வரிசையில் உங்கள் பெயரையும் கொடுத்து மரியாதை செய்திருக்கிறேன்.

//
உங்கள் மொத்த கட்டுரையும் ஒரே ஒரு தர்க்கத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது. அது.. நக்சல்பாரிகள் அப்பாவியான மனிதர்களை கொல்லும் கொலைவெறியர்கள் என்பது. மார்க்சிய-லெனினியு-மாவோசியம் என்பது அரசுக்கும் அதிகார மற்றும் ஆளும் கேடுகெட்ட பின்-முன்-நவ காலனிய தரகு முதலாளிய நிலபிரபுத்துவ சக்திகளுக்கும் எதிரானது. அது அப்பாவி மக்களக்கு அல்ல. அப்பாவி மக்களை அது கொன்றதும் இல்லை.
//


நக்ஸல்பாரிகள் மட்டுமல்ல, கம்யூனிஸ சித்தாந்தமே அப்படிப்பட்டதுதான்.

அந்த சித்தாந்ததின் கீழே தான் இருப்பதாக கூறும் அனைவருமே வன்முறை மூலம் அதிகாரத்தை பெறுவதை அடித்தளமாகவும், தான் கொண்ட கொள்கையாகவும் கொள்பவர்கள். கார்ல்மார்க்ஸ், எஞ்செல்ஸ், ரோஸா லக்ஸம்பர்க், லெனின், ட்ராட்ஸ்கி, மாவோ, ஸ்டாலின், போல்போட் என்று நீளும் வரிசையில் உள்ள அனைவருமே வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவதை முக்கியமானதொரு அடித்தளகொள்கையாக கொண்டவர்கள்.

நான் உயரிய நோக்கத்திற்காக கொல்கிறேன் என்றுதான் எல்லா வன்முறையாளர்களும் கூறுகிறார்கள். அப்பாவி மக்கள் என்பது ஆயிரக்கணக்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக மந்திரியின் மகனாகவோ, அல்லது ஏழையின் மகனாகவோ, புரட்சிக்காரனின் மகனாகவோ, அல்லது கொலைகாரனின் மகனாகவோ பிறந்த அனைவரும் சேர்ந்ததுதான். வீரப்பனின் மனைவிக்கும் இந்த நாட்டில் தேர்தலில் நிற்கவும் ஓட்டுக்களை கேட்கவும் சுதந்திரம் உண்டு. அவர் வீரப்பனின் மனைவி என்பதற்காகவே கொல்லப்பட்டால் எதிர்த்து குரல் கொடுக்கவும் இந்த நாட்டில் உரிமை உண்டு. அந்த உரிமை இருக்கவேண்டும். அதற்காகத்தான் ஜனநாயகம்.

//
பொதுமக்கள் என்று பேசுவது ஒரு மாய்மாலம். பொதுமக்கள் என்றெல்லாம் யாரும் இல்லை. நமக்கிடையே பொதுவானது என்று எதுவம் இல்லை எனும் போது எப்படி பொதுமக்கள் இருப்பார்கள். ஒருவன் மலம் அள்ளுகிறான் ஒரவன் மலர்படக்கை குத்துவதாக புகார் கூறிக்கொண்டுள்ளான் இதில் எது பொது. தவிரவும் பொதுமக்கள் என்பது மக்களை ஏய்க்க முதலாளித்துவம் கண்டுபிடித்த ஒரு யுத்தி. அப்பதான் தனது வயித்து வலியெல்லாம் பொதுமக்கள் வலியாக காட்டி ஏய்த்து ஏப்பம் விடலாம்.
//

பொதுவானது இருக்கும்போதுதான் பொதுமக்கள் என்பது வினோதமான வாதம். அப்படி பொதுவானது என்று பார்த்தால், எல்லோருக்கும் மூளை இருக்கிறது, கை கால் இருக்கிறது உயிர் இருக்கிறது என்று சொல்லலாம். மலம் அள்ளுபவனாக இருந்தாலும் மலர்படுக்கையில் புரள்பவனாக இருந்தாலும் அவன் மனிதனே. மலம் அள்ளுபவனுக்கும் மலர் படுக்கையில் படுக்க விரும்பினால், அதற்காக தன் தொழிலை மாற்றிக்கொள்ள விரும்பினால் அதற்கான உரிமையும் வாய்ப்புக்களும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட எல்லோருக்குமான வாய்ப்புக்கள் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஜனநாயகம். ஒரு குடிசையில் தாழ்த்தப்பட்டவனாக பிறந்தாலும் இங்கு ஜனாதிபதி ஆகலாம், அல்லது ஒரு பன்னாட்டு கம்பெனியின் முதலாளி ஆகலாம், சிறந்த விஞ்ஞானி ஆகலாம் என்பது இந்த ஜனநாயகம் கொடுக்கும் உறுதிமொழி. அது முழுவதும் நிறைவேற்றப்பட்டுவிட்டதா என்றால் நிச்சயம் இல்லை. ஓரளவுக்கேனும் நிறைவேற்றப்பட்டுள்ளதா எனில், நிச்சயம் ஆமாம் என்றுதான் கூறவேண்டும்.

பொதுமக்கள் என்று ஒன்றும் இல்லை என்று நீங்கள் கூறுவதன் காரணம் எனக்கு விளங்குகிறது. அதாவது ஒருவன் தொழிலாளியாக உழைத்து ஓடாக போகவேண்டும். அப்படி அவன் புதியதாக எதையாவது கண்டுபிடித்தோ அல்லது சிறப்பாக வேலை செய்தோ, தன் மூளையை உபயோகித்தோ முதலாளியாக ஆகி அவன் பலருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க முனைந்தால், அவன் கொல்லப்பட வேண்டும். அவன் அப்போது கேடுகெட்ட முதலாளி ஆகிவிடுகிறான்.

//
சரி நக்சல்பாரிகள் இதுவரை எத்தனை பொதுமக்களைக் கொன்றார்கள்? எந்த பொதுமக்கள் உங்களிடம் வந்த பிராது கொடுத்தார்கள்? வன்முறை போராட்டம் என்பதெல்லாம் ஒரு உடலின் உட்செறிக்கப்பட்டள்ள உணர்வுகள். நீங்களோ நானோ பிறக்கும் பொழுதே லட்சக்கணக்கான சக உயிரணுக்களை கொண்றுதான் பிறக்கிறோம். ஒரே ஒரு விந்தணு நானோ அல்லது நீங்களோ மற்ற லட்சக்கணக்கான விந்தனுவை வாலால் அடித்து கொண்று விட்டுத்தான் கருப்பையில் நுழைகிறோம். ஆக, அப்பழக்கற்ற அமைதி என்கிற மாயையை உருவாக்க வேண்டாம். மனிதனுக்கள் உட்செறிக்கப்பட்டிருக்கும் வன்முறை என்பது பல வடிவங்களைக் கொண்டது. அவற்றை அடியோடு ஒழிப்பதற்கான திட்டம்தான் மார்க்சியம்.இப்பொழுது நீங்கள் எழுதும் மறுப்பும் அதன் ஒரு வடிவம்தான்.
//


கொல்லப்பட்டவர்கள் எப்படி பிராது கொடுப்பார்கள். தினந்தோறும் செய்திகள் வருகின்றன. கம்யூனிஸ்ட் என்று தங்களை கூறிக்கொள்ளும், நேபாள மாவோயிஸ்டுகளிலிருந்து, பெங்கால், ஜார்க்கண்ட், பிகார், ஆந்திரா தமிழ்நாடு என்று பரவும் நக்ஸல்பாரிகளிலிருந்து, உல்பா கம்யூனிஸ்டுகளிலிருந்து, வடகிழக்கு பயங்கரவாதிகளிலிருந்து நடுத்தெருவில் சந்தையில் என்று குண்டுவைக்கும் பயங்கரவாதிகள், துர்கா பூஜை பந்தலில் குண்டுவைக்கும் கம்யூனிஸ்டுகள் என்று தினந்தோறும் செய்திகள் வருகின்றன. அவைகள் எல்லாம் தீர்க்கப்படவேண்டிய வர்க்க எதிரிகளே என்று நீங்கள் சொன்னால், நான் வேறென்ன சொல்லமுடியும்?

அப்பழுக்கற்ற அமைதி என்பது ஒரு ஜனநாயக நாட்டில் எப்போதும் இருக்கமுடியாது. இருக்கவும் கூடாது. மயானத்திலும், எல்லோரும் ஒரேமாதிரி சிந்திக்க "பழக்கப்போகும்" கம்யூனிஸத்திலோ, அல்லது இயேசுவின் இரண்டாம் வருகை அரசாங்கத்திலோதான் அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற அமைதி இருக்கும்.

கம்யூனிஸ்டுகளின் வன்முறையை நீங்கள் விளக்குவது அலாதியானது. அதாவது உலகெங்கும் வன்முறை இருக்கிறது. விந்தணுவிலிருந்து வன்முறை இருக்கிறது ஆகவே கம்யூனிஸ்டுகள் வன்முறை செய்வது சரியானது என்ற விளக்கத்தை சற்றே நீங்கள் எதிர்க்கும் வன்முறைகளுக்கும் பொருத்தி "ஓக்கே" சொல்வீர்களா?

மனிதனுக்குள் வன்முறை என்று ஏதும் இல்லை. பெரும்பாலான மக்கள் ஒருவரோடு ஒருவர் ஒத்திசைந்து மற்றவரை மதித்தே வாழ விரும்புகிறார்கள். ஒருசிலர் கம்யூனிஸ்டுகளை போல இருக்கலாம். அதற்கு என்ன செய்யமுடியும்? மற்றவர்கள் மீது வன்முறையை பிரயோகிக்காதவரை உங்களை சகித்துக்கொள்ளவேண்டியதுதான்.

//
ஒருவன் மற்றவனை கொல்வது தர்க்கரீதியாக தவறு என்றால் எதற்காக போலிஸீம் கோர்டும் தண்டனையும். நக்சலைட்டகளைக் கொல்வதும் ஒரு வன்முறைதானே. இன்றைய அமைப்பே மனநோய் கொண்ட அமைப்புதான். இல்லாவிட்டால் கருவில் இருக்கம் குழந்தையை உருவி சூலாயுதத்தால் குத்தி நெருப்பில் இரத்தம் சொட்ட சொட்ட காட்டுவார்களா? இந்த மனநோயாளிகளை உங்கள் வாக்குப்பெட்டி அரசு என்ன செய்தது? உங்களது மக்கள் காவலர்கள்தான் என்ன செய்தார்கள்?
//


தெஹெல்கா இந்த இந்தியாவின் திறந்த சமூகத்தில்தான் சாத்தியமாக ஆகியுள்ளது. அது இன்னும் பலரை இவர்களை வெறுக்க தூண்டும். மனிதர்களின் மனத்தில் உள்ள மனிதாபிமானமே மக்களை மதம், கருத்து தாண்டி அப்பாவியாக கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கவும், அப்படி அப்பாவிகளை கொன்றவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லவும் வைக்கிறது.

தெஹெல்காவுக்கு எந்த இந்தியா சுதந்திரம் கொடுக்கிறதோ அதே சுதந்திரத்தின் வழியாகத்தான் உங்களோடும் நான் விவாதித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு கம்யூனிஸ நாட்டில் எனக்கு இந்த சுதந்திரம் இருக்குமா? கம்யூனிஸ நாடோ சோசலிச நாடோ இதே போல படுகொலைகளை நிகழ்த்தியபோது, அதன் பத்திரிக்கை வாய் கட்டப்பட்டிருந்தது.மக்களின் கருத்து சுதந்திரம் நசுக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் மக்களிடம் இருக்கும் மனிதாபிபான உணர்வும் நசுக்கப்பட்டது.

//
நக்சல்பாரிகள் மக்களை கொல்வதில்லை. அதனால்தான் அரசு அவர்களை கொல்கிறது. அதனை நியயாப்படுத்தி நீங்கள் தம்பட்டமும் அடிக்கறீர்கள். அல்லது நரேந்திர மோடி போல மக்களைக் கொன்றால் அரசும் அதிகார ஆயுதத்தால் பயமுறுத்தப்பட்ட மக்களும் வாக்களித்து மோடியை மீண்டும் மீண்டும் ஆட்சியல் அமர்த்துவார்கள். இது ஜனநாயகம் இல்ல ஆயுத பலமும் பணமும் கொண்ட பணநாயகம். சாதி மத பலமில்லாமல் உங்கள் ஓட்டுக் கட்சிகள் மக்களைத் திரட்ட தயாரா?
//

சாதி மத பலமில்லாமல் ஓட்டுக்கட்சிகள் மக்களை திரட்டித்தான் வருகின்றன. கண்களை சற்றே திறந்து பார்த்தால் தெரியும். தலித்துகள் மட்டுமே திருமாவளவனுக்கு ஓட்டு போடுவதில்லை. தனியாக அவர் தேர்தலில் நின்றபோது தலித்துகளின் எண்ணிக்கையையும் தாண்டி அவருக்கு ஓட்டு விழுந்தது. வன்னியர் அனைவரும் பாமகவுக்கு வாக்களிப்பதில்லை. பாமகவுக்கு வாக்களிக்கும் அனைவரும் வன்னியர்களும் அல்லர். எம்ஜியார் என்ன சாதி மத பலத்துடன் தமிழ்நாட்டில் நின்று வெற்றி பெற்றார்? மம்தா பானர்ஜி எந்த சாதி மத பலத்துடன் மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக போராடி வருகிறார்?

//
1969-ல் துவங்கிய நக்சல்பாரிகளின் எழுச்சிக்கு பிறகு நக்சல்பாரிகளால் கொல்லப்பட்டவர்களைவிட அரசால் கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகளே அதிகம். என்கவுண்டர் என்கிற தொழில் நுட்பமே ஆந்திர நக்சலைட்டுகளுக்கு எதிராக கியூ பிராஞ்சால் உருவாக்கப்பட்டதுதான். உதாரணமாக ஒரு கிரிமினல் என முத்திரைக் குத்தப்பட்ட வீரப்பனை முன்வைத்து எத்தனைப்பேரைக் கொன்றது இந்த அரசு. வீரப்பனால் கொல்லப்பட்வர்களைவிட அரச பயங்கரவாதத்தால் செத்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். யூனியன் கார்பைடு கொன்றவர்களைவிட, அமெரிக்க அணு ஆயுதம் கொன்றதைவிட, இந்திரா கொலையில் கொல்லப்பட்ட சீக்கியர்களைவிட, குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களைவிட, ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களைவிட, சாதி இந்துக்களால் கொல்லப்பட்ட தலித்துகளைவிட, நாகரீகம் என்கிற பெயரால் கொல்லப்ட்ட ஆதிவாசிகளைவிட ஸ்டாலினும் மாவோவும் கொன்றதாக சொல்லப்படும் மக்கள் எண்ணிக்கை ஒன்றும் அதிகமில்லை. இது எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை அல்ல. வன்முறை என்பது வரலாற்றினை நகர்த்தி்க் கொண்டிருக்கும் பற்சக்கரம். வன்முறை என்பது ஒரு தொடர் விளையாட்டு அதனை அரசே முன் நின்று துவக்கியது. ஆட்டத்தை பாதியி்ல் நிறுத்த அரசும் தயாரில்லை அவர்களும் தயாரில்லை.
//

வீரப்பனை முன்வைத்து என்கவுண்டரில் சாதாரண அப்பாவி மக்கள்கொல்லப்பட்டனர் என்ற விஷயமும் வந்தது இந்த சுதந்திர ஜனநாயகத்தில்தான். ஆனால், சோசலிஸ்டுகளின் ஆட்சியில் சீனாவில், அப்பாவி உகைர் மக்கள் கொல்லப்பட்டதும், அப்பாவி திபெத் மக்கள் கொல்லப்பட்டதும், நம் ஊர் கம்யூனிஸ்டுகளின் மனத்தில் கூட எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையே? அது ஏன்? திபெத் மக்கள் கொல்லப்பட்டது அவர்களுக்கு நல்லது என்று மவுண்ட் ரோடில் இருக்கும் ஒரு ஆங்கிலப்பத்திரிக்கை தலையங்கம் எழுதியதே, அது ஏன்? ஏனெனில், கம்யூனிஸத்துக்காக அப்பாவி மக்களை கொல்வது சரி என்பது உங்களுக்கு மனத்தில் ஏறி உங்களது மனிதாபிமானத்தை கொன்றுவிட்டது.

//
மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் செலவழிப்பதன் முரண்பாடு ஏன்? வீரப்பனை ஒழித்ததுபோல் ஏன் நக்சல்பாரிகளை ஒழிக்க முடியவில்லை. அப்படியே கம்யூனிஸத்தை ஒரு மதமாக நாங்கள் நம்பினாலும் அதனை நடைமுறைப்படுத்த உங்கள் ஜனநாயகத்தில் உரிமை இல்லையா? கம்யூணிஸம் அடிப்படையில் கொலைவெறித் தத்துவம் என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படியென்றால் வைணவர்களையும் சமண பெளத்தர்களைக் கொன்ற சைவத்தை என்னவென்பது? எல்லா மதங்களும் கொலைவெறித் தத்துவங்கள்தான் என்று நீங்கள் கூறத்தயாரா? உடனே மதம் வேறு மதவெறி வேறு என்று ஜல்லியடித்தால் நீங்கள் கம்யூணிஸம் நல்ல தத்துவம் என்று ஒத்துக் கொள்ள வேண்டி வரும். அதற்காவது தயாரா?
//

உங்களைப்போன்று புரியாத வார்த்தைகளை எழுதும் கம்யூனிஸ்டுகளை பார்த்து, இளைஞர்கள் உங்களை பெரிய அறிவுஜீவிகள் என்று நினைக்கிறார்கள். கம்யூனிஸ்ட் என்றால் ஏதோ புத்திசாலி என்பது போன்ற பிரமையை இங்கே கம்யூனிஸ்டுகளும், கம்யூனிஸ்டு ஆதரவாளர்களும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால், தன்னை புத்திசாலி என்று காட்டிக்கொள்ள ஒரு அப்பாவி இளைஞர் கூட்டம் திசை தவறி உங்களிடமும் நக்ஸல்பாரிகளிடமும் சேர்கிறது.

கம்யூனிஸம் அடிப்படையில் கொலைவெறி தத்துவம் தான். வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று சொல்லும் எல்லா கொள்கைகளும் கொலைவெறி தத்துவங்கள்தான்.

ஒரு மதத்தில், இந்த தெய்வத்தை கும்பிடாதவன் கொல்லப்பட வேண்டும் என்று இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அது கொலைவெறி தத்துவம்தான்.

வர்க்க எதிரிகளை கொல்லுவது சரி என்று மார்க்ஸிஸம், கம்யூனிஸம் கூறுகிறது. ஆகவே அது ஒரு கொலைவெறி தத்துவம்.

//
காலை எழுந்தவுடன் கம்யூணிஸம் ஒழிக. மார்க்ஸ் ஒழிக என்ற பஜனைப்பாடுவதும் ஒருவகை மனநோய்தான். இது அம்ணிஸயா இல்லை பரோணியா.
//


காலையில் எழுந்ததும், கம்யூனிஸம் வாழ்க, மார்க்ஸ் வாழ்க என்று பஜனை பாடுவதும் ஒரு மனநோய்தான். இது நீங்களே உங்களுக்கு செய்துகொண்டால் பரவாயில்லை. ஆனால், சோசலிஸம் வந்ததும், எல்லோரையும் வரிசையில் நிற்கவைத்து சீனத்தில் செய்வது போல, வரிசையில் நிற்கவைத்து, ஒரே மாதிரி மாவோவின் சிவப்பு புத்தகத்தை தூக்கி இறக்கி கம்யூனிஸம் வாழ்க, மார்க்ஸ் வாழ்க மாவோ வாழ்க என்று கோஷம் போட வைப்பதற்கு இவைகளை எதிர்ப்பது பரவாயில்லை, இல்லையா?

//
பயங்கரவாதத்தை அரசு விடுமா? உங்கள் அதீத தர்க்கத்தை அரசுக்கு எதிராக முன்வையுங்களேன். காந்தியின் கதை என்ன? வன்முறை வேண்டாம் என்றார் என்பதற்காக அவருக்கே வன்முறை பரிசாக தரப்பட்டது. உத்தமனாகக் கருதிக் கொண்டு மற்றதை கொலை வெறி மூர்க்கம் என்று பிணாத்துவதில் பயனில்லை. நீங்கள் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை உங்கள் எதிரிதான் தீர்மானிக்கிறான். நீங்களோ நானோ அல்ல. இன்றைய வாழ்க்கை உங்களுக்கு சிறந்தது. ஆணால் அடிப்படை உழைக்கும் மக்களக்கு? அந்த பிரச்சனைக்கு நாம் ஏன் போக வேண்டும் என்கிறீர்களா? இதனை பேசாமல் மேலோட்டமாக நீங்கள் மறுப்பு என்று எதையாவது எழுதிக் கொண்டிருக்க முடியாது.
//


அடிப்படை உழைக்கும் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியான உணவையோ ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களையோ அல்லது ஒரே அளவு சம்பளத்தையோ வாங்கிக்கொண்டிருக்கவில்லை. சென்னையில் இன்னொருவரின் காரை ஓட்டி சம்பாதிப்பவரும், திருத்துறைப்பூண்டியில் கூலி விவசாயியும் ஒன்றல்ல. ஒரே சம்பளத்தையோ ஒரே வசதி வாய்ப்பையோ அல்லது ஒரே வாழ்க்கையையோ, தங்கள் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான கல்வியை பெறக்கூடியவர்களோ அல்ல. ஆனால் ஒவ்வொருவரும், தங்களுக்கு அடுத்து என்ன செய்தால் நன்றாக வாழலாம் என்றும், தன் குழந்தைக்கு என்ன நன்மை என்று உணரக்கூடியவர்கள். தங்கள் குழந்தை என்ன படித்தால் வாழ்க்கையில் சிறப்பாக வாழலாம் என்று தெரிந்தவர்கள். அதற்கு நம்மால் உதவ முடிந்தால், கல்வியை பரவலாக்குவதும், வாய்ப்புகளை பரவலாக்குவதும்தான்.

அவர்களிடம் போய் "உங்களுக்கு காலை மாலை சாப்பாடு போடுகிறேன், ஆனால், நான் சொல்லும் பணக்காரர்களை எல்லாம் நீங்கள் கொல்லவேண்டும்" என்று சொன்னால், போங்கடா என்று போய்விடுவார்கள். இதனைத்தானே நீங்கள் சொல்கிறீர்கள்? எல்லா பணக்காரர்களையும் தொழிற்சாலை முதலாளிகளையும் கொல்லவேண்டும், அதுதான் புரட்சி, அதற்கப்புறம் எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கப்படும், வீட்டில் விளக்கெரியும், நீங்கள் சொல்வதை இலக்கியம் என்று எல்லோரும் படித்து புல்லரிக்கவேண்டும், இதுதானே? (போல்போட் இன்னும் பல விஷயங்களை செய்தான். அவற்றை இங்கே எழுதினால், படுகேவலமாகிப்போகும். )

வன்முறை வேண்டாம் என்று சொன்னவர் வன்முறையால் இறந்தால், வன்முறை வெற்றி பெற்றுவிட்டதாக அர்த்தமா?

அவர் தானே வன்முறையில் இறங்கினால்தான் அவரது கொள்கை தோற்றதாக அர்த்தம்.

நீங்கள் என்ன ஆயுதத்தை எடுக்கப்போகிறீர்கள் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள். உங்கள் எதிரி தீர்மானித்தான் என்றால், ஆயுதத்தை பிரயோகிக்கும் முன்னாலேயே அவன் ஏற்கெனவே வெற்றிபெற்றுவிட்டான் என்றுதான் பொருள்.

//
உங்களைப்போல வரிக்குவரி எதிர்த்து எழுதுவது என்பது நேரவிரயம்தான். காரணம் விவாதத்திற்கானதோ அல்லது உரையாடுவதற்கானதோ அல்ல உங்கள் மறுப்பு. அது தனது கருத்தை திணிப்பதற்கான முயற்சி. அது பேச்சல்ல போதணை. அதை கேட்டு திருந்தக்கூடிய அணாணிகளும் அல்லக்கைகளும் அல்ல நாங்கள். நாங்கள் என்பது மார்க்சியம் என்கிற நீங்கள் ஒவ்வா என ஒதுக்கும் மதத்தை நம்புபவர்கள். அழகாக திருவண்ணாமலையில் ஒரு தோட்டம் வாங்கி ஆசிரமம் நடத்தலாம். வரிவிலக்கும் உண்டு. நீங்கள்லாம் கூறி திருந்துற ஜன்மங்கள் நாங்க கிடையாது. அம்புடுத்தான். அதுக்கமேலே ஒரு வார்த்தைய நான் நகட்டுல.

உள்ளேன் அய்யா!!!!!! அட்டெண்டன்ஸ் போட்டாச்சு போறுமா?


12. November 2007 03:20
//


எனக்கு நேரவிரயம் இல்லை. இது உரையாடல்தான். உரையாடும் வரைக்கும் உங்களிடமிருந்து நானும் என்னிடமிருந்து நீங்களும் தெரிந்துகொள்கிறோமோ இல்லையோ, நமக்குள்ளாகவே ஒரு உரையாடலை நிகழ்த்துவோம். அது பயனுள்ளது.

அட்டெண்டன்ஸ் போதாது. மேலும் வாருங்கள்.

16 Comments:

Anonym said...

அமைதியாக வாதிடும் உங்கள் பண்பு பாராட்டத்தக்கது.

said...

தமிழ்மணி,

மிக சிறப்பாக வாதங்களை அடுக்கி வைக்கும் அதே சமயத்தில் நிதானத்தை இழக்காமல் பண்புடன் வாதிடுகிறீர்கள்.மிக சிறப்பான உங்கள் வாதத்திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

said...

Thanks Anony
Thanks Selvan

for the kind words

said...

//உங்களைப்போல வரிக்குவரி எதிர்த்து எழுதுவது என்பது நேரவிரயம்தான். காரணம் விவாதத்திற்கானதோ அல்லது உரையாடுவதற்கானதோ அல்ல உங்கள் மறுப்பு. அது தனது கருத்தை திணிப்பதற்கான முயற்சி. அது பேச்சல்ல போதணை. அதை கேட்டு திருந்தக்கூடிய அணாணிகளும் அல்லக்கைகளும் அல்ல நாங்கள். நாங்கள் என்பது மார்க்சியம் என்கிற நீங்கள் ஒவ்வா என ஒதுக்கும் மதத்தை நம்புபவர்கள். அழகாக திருவண்ணாமலையில் ஒரு தோட்டம் வாங்கி ஆசிரமம் நடத்தலாம். வரிவிலக்கும் உண்டு. நீங்கள்லாம் கூறி திருந்துற ஜன்மங்கள் நாங்க கிடையாது. அம்புடுத்தான். அதுக்கமேலே ஒரு வார்த்தைய நான் நகட்டுல//

தனிப்பதிவில் கூவி அழைப்பதால் ஒரு சில வார்த்தைகளை எனது ஒப்பந்தத்தைமீறி இங்கு நகட்டுவதற்கு மன்னிக்கவும்.
உங்கள் அளவிற்கு எனக்கு கோணார் உரை எல்லாம் வரிக்கு வரி எழுத தெரியாது. அதியமான் துவங்கி அணாணி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்....

இவ்வளவு தெளிவாக கூறியும் மல்லுக்கட்டுவதன் அடிப்படை என்ன? உங்களை நீங்கள் நிரூபித்துக் கொள்ள உங்கள் அணாணிகள் என்கிற அணாமதேயங்கள் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் உங்களுடன் மல்லுக்கு நிற்பதில் அர்த்தமில்லை.

வயிற்றுக்கு சோரிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்கிற பாரதியின் கனவை நிறைவேற்றக்கூடிய எந்த ஒரு அமைப்பையும் ஆதரிப்பதே எனது நிலைப்பாடு. அது சர்வாதிகாரமா? அல்லது ஜனநாயகமா? என்கிற பெயர் குறித்த பிரச்சனை அல்ல. தவிரவும் ஜனாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. சிறுபான்மை பெரும்பான்மையை ஆண்டால் அது சர்வாதிகாரம். பெரும்பான்மை சிறுபான்மையை ஆண்டால் அது ஜனநாயகம். அடிப்படையில் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனைதான். இந்த எண்ணிக்கையும் இந்திய ஜனநாயகத்தில் சாத்தியமில்லை. காரணம்..36 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சிகள்தான் 64 சதவீதம் மக்களை ஆள்கிறது. சாதியும் மதமும் அதிக்கம் வகிக்கும் ஒரு அடிப்படை ஜனநாயகமற்ற ஒரு சமூகத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் என்பதன் கேலிக்கூத்தைதான் இட ஒதக்கீடு துவங்கி எல்லா பிரச்சனைகளையிலும் பார்க்கிறோமே. உயர்நீதி மன்றம் துவங்கி எல்லாவற்றிலும் இந்த பிரதிநிதித்துவ அரசியல் எப்படி ஆள்கிறது என்று.

அடிபபடைப் பிரச்சனைகளை விட்டுவிட்டு மேலோட்டமாக பேசுவது பயனற்ற வாதம். இந்திய மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்வதற்கான அதாவது 3 வேளை சாப்பாடு ஏற்றத்தாழ்வற்ற பொரளாதாரம் இப்படி... இவற்றை தீர்க்க உங்களது வழி என்ன? திட்டம் என்ன? மனிதனை மனிதன் கொல்லாத ஒரு வன்முறையற்ற மாற்று சமூகத் திட்டத்தை கூறுங்கள். நக்சல்பாரிகளின்அடிப்படைக் கோட்பாடு இவைதான். உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்கான ஏற்பாடுகள் துவங்கி... எல்லோருக்குமான சமத்துவம் உள்ள வாழ்க்கை. தீண்டாமை என்றும் சாதி என்றும் மனிதர்களை வாழும் சமூகத்திலேயே கீழானவர்களாக ஒடுக்கி வைத்திருக்கும் இந்த ஜனநாயகத்தைவிட சமத்துவமான வாழ்வு ஒரு சர்வாதிகாரத்தால்தான் சாத்தியம் எனில் அந்த சர்வாதிகாரம் ஆதரிக்கப்பட வேண்டியதே.

சமத்துவமற்ற மனிதனை மனிதன் சுரண்டுகிற தீண்டாமை துவங்கி அனைத்து சாதியக் கொடுமைகளும் ஒழிக்கப்பட்டு மதத்தின்பேரால் இனத்தின் பேரால் நடைபெறும் மனித அழிவுகள் அனைத்தும் நிறுத்தப்படும்வரை புரட்சியும் மக்கள் எழுச்சியும் வெவ்வேறு வடிவங்களில் வந்துகொண்டுதான் இருக்கும். காரணங்களைவிட்டுவிட்டு காரியங்களை பற்றி பேசுவதில் பயனில்லை. நக்சலபாரிகள் முன்வைக்கும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வழி உண்டா சொல்லுங்கள். பிரச்சனை நக்சல்பாரிகள் நல்லவர்களா? கெட்டவர்களா? கிரிமினல்களா? என்பதல்ல.. அவர்கள் உருவான காரணம் என்ன? அது தீர்க்கப்ட்டும் அவர்கள் தங்களது வன்முறையை தொடர்கிறார்களா? என்பதுதான். ஒடுக்கப்பட்டு கிடக்கும் ஆகக்கீழான மக்களைக்கூற மலம் அள்ளுதலை கூறினால் அதனை நக்கலுடன் அனுகும் உங்கள் அனுகுமுறைகள் தானெ அம்பலப்பட்டுவிட்டதை உணருங்கள் நீங்கள் யாருக்காக வாதாடகிறீர்கள் என்று.

அதனால் இந்த விவாதமே உங்களை நீங்கள் நிரூபித்துக்கொள்வதற்கான ஒரு உத்திதான். அதற்காக அங்கீகாரம் தேடி அலைவதே இதில் வெளிப்படுகிறது. அதனால் இந்த விவாதத்தை அல்லது உங்கள் முன்முடிவுகளை தொடர்பவர்கள் தொடரட்டும். திரும்பவும் இது நேர விரயம்தான். நான் முன்பே கூறியபடி.. உங்களது இந்த விளையாட்டிற்கு நான் ஆளில்லை. ஒன்று செய்யுங்கள் உங்களது இந்த சமூகப்பணியை தொடர்ந்து செய்யுங்கள். சீனாவின் மாபெரும் மக்கள் தலைவர் அல்லது உங்களது பாணியில் சர்வாதிகாரி கூறியுள்ளார் "நூறு பூக்கள் மலரட்டும் நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்" என்று. அப்பொழுதுதான் மற்றவர்களுக்கும் தெளிவு பிறக்கும். உங்களது ஆழ்ந்த புலமையுடன் ஆன அமைதியான இந்த விவாதமுறைக்கு பாராட்டுக்கள். இந்த அமைதியான முறையிலேயே தொடர்ந்து எல்லாவற்றிற்கும் மறுப்பு கருத்துகள் வரிக்கு வரிக்கு எழுதுங்கள். தனிப்பதிவுகளாக போட்டு திரும்பவும் ஒன்டே மேட்சைத் துவங்காதீர்கள். இது ஒரு விவாத முறை அல்ல. மற்றவர்களுக்கு படம் காட்டவதற்கான ஒரு எளியமுறை அவ்வளவே. வாசிப்பவாக்ளுக்கு புரியும்.

எனது பெயரைப்போட்டு தமிழ்மணத்தில் பரப்புரை செய்தமைக்கு நன்றி. தனிமனிதர்களை தாக்காத பதறாத உங்கள் எழுத்து முறைக்கு பாராட்டுகள். எனது முந்தைய பதிவில் உள்ள முன்னுரை உங்களை வருத்தப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். மற்றபடி.. உங்கள் விவாதம் தொடர்ந்து கம்யூணிஸத்தையும் நக்சலிஸத்தையும் வேரடி மண்ணோடு ஒழித்துவிட்டால் அதைவிட சந்தோஷம் இந்த உலகில் வேறு என்னதான் இருக்கும் சொல்லுங்கள். அதன்பின் பாலாறு தேனாறுதான். அதை ஓவராகக் குடித்து இந்திய ஜனநாயகத்தில் மலச்சிக்கல் வராமல் எல்லோரும் கழிந்து தள்ள வேண்டியதுதான் பாக்கி.. இப்பொழுது நாம் எழுதிக் கொண்டிருப்பதைப் போலவும் இதற்கு வரப்போகும் பின்னோட்டங்களைப் போலவும்.

நன்றிகளுடன்.

said...

ஜமாலன் கூறியது
//->உங்களைப்போல வரிக்குவரி எதிர்த்து எழுதுவது என்பது நேரவிரயம்தான். காரணம் விவாதத்திற்கானதோ அல்லது உரையாடுவதற்கானதோ அல்ல உங்கள் மறுப்பு. அது தனது கருத்தை திணிப்பதற்கான முயற்சி. அது பேச்சல்ல போதணை. அதை கேட்டு திருந்தக்கூடிய அணாணிகளும் அல்லக்கைகளும் அல்ல நாங்கள். நாங்கள் என்பது மார்க்சியம் என்கிற நீங்கள் ஒவ்வா என ஒதுக்கும் மதத்தை நம்புபவர்கள். அழகாக திருவண்ணாமலையில் ஒரு தோட்டம் வாங்கி ஆசிரமம் நடத்தலாம். வரிவிலக்கும் உண்டு. நீங்கள்லாம் கூறி திருந்துற ஜன்மங்கள் நாங்க கிடையாது. அம்புடுத்தான். அதுக்கமேலே ஒரு வார்த்தைய நான் நகட்டுல//

தனிப்பதிவில் கூவி அழைப்பதால் ஒரு சில வார்த்தைகளை எனது ஒப்பந்தத்தைமீறி இங்கு நகட்டுவதற்கு மன்னிக்கவும்.
உங்கள் அளவிற்கு எனக்கு கோணார் உரை எல்லாம் வரிக்கு வரி எழுத தெரியாது. அதியமான் துவங்கி அணாணி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்....

இவ்வளவு தெளிவாக கூறியும் மல்லுக்கட்டுவதன் அடிப்படை என்ன? உங்களை நீங்கள் நிரூபித்துக் கொள்ள உங்கள் அணாணிகள் என்கிற அணாமதேயங்கள் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் உங்களுடன் மல்லுக்கு நிற்பதில் அர்த்தமில்லை.
<-//
உங்களை திருத்துவதற்கு எனக்கென்ன உரிமை இருக்கிறது. அப்படிப்பட்ட எந்த ஒரு கனவும் என்னிடம் இல்லை. நான் வெறுமே உரையாடுகிறேன். அவ்வளவுதான்.
நீங்கள் கூறியுள்ளவற்றில் பிரச்னைகள் என்று எனக்கு தோன்றியவற்றை நான் எழுதுகிறேன். அதற்கு நீங்கள் பதில் எழுதுகிறீர்கள். இதில் திருத்துவது எங்கே வருகிறது?
மேலும் மார்க்ஸியமோ கம்யூனிஸமோ மதம் இல்லை, அது விவாதததிற்குரியது. விஞ்ஞானம் என்று எழுதினார்கள். விஞ்ஞானம் கேள்விகளால்தான் முன்னேறுகிறது. விஞ்ஞானம் முழுவதும் பொய்படுத்தக்கூடிய தேற்றங்களால் நிறைந்தது.
விஞ்ஞானம் என்பது முடிவுகளில் இல்லை. முறைகளில் இருக்கிறது.
கம்யூனிஸம் மதம் இல்லை, அது விஞ்ஞானம் என்றால் விவாதத்தை வலிந்து ஏற்றுக்கொள்ளவேண்டுமே?
//->
வயிற்றுக்கு சோரிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்கிற பாரதியின் கனவை நிறைவேற்றக்கூடிய எந்த ஒரு அமைப்பையும் ஆதரிப்பதே எனது நிலைப்பாடு.
<-//
நல்ல நிலைப்பாடு
வயிற்றுக்குச் சோறுமட்டுமே மனிதனுக்கு ஒரே தேவை அல்லவே. பாரதியாருக்கு கவிதையும் முக்கியமாக இருந்ததே. கவிதையோ சோறா என்ற கேள்வி பாரதியாரின் முன்னால் இருந்தால் அவர் எதனை தேர்ந்தெடுத்திருப்பார் என்று யோசித்துப்பாருங்கள்.
//->
அது சர்வாதிகாரமா? அல்லது ஜனநாயகமா? என்கிற பெயர் குறித்த பிரச்சனை அல்ல. தவிரவும் ஜனாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. சிறுபான்மை பெரும்பான்மையை ஆண்டால் அது சர்வாதிகாரம். பெரும்பான்மை சிறுபான்மையை ஆண்டால் அது ஜனநாயகம். அடிப்படையில் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனைதான். இந்த எண்ணிக்கையும் இந்திய ஜனநாயகத்தில் சாத்தியமில்லை. காரணம்..36 சதவீதம் ஓட்டு வாங்கிய கட்சிகள்தான் 64 சதவீதம் மக்களை ஆள்கிறது. சாதியும் மதமும் அதிக்கம் வகிக்கும் ஒரு அடிப்படை ஜனநாயகமற்ற ஒரு சமூகத்தில் மக்கள் பிரதிநிதித்துவம் என்பதன் கேலிக்கூத்தைதான் இட ஒதக்கீடு துவங்கி எல்லா பிரச்சனைகளையிலும் பார்க்கிறோமே. உயர்நீதி மன்றம் துவங்கி எல்லாவற்றிலும் இந்த பிரதிநிதித்துவ அரசியல் எப்படி ஆள்கிறது என்று.
<-//
ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. அது வெறும் எண்ணிக்கை சார்ந்த பிரச்னை இல்லை. ஜனநாயகத்தில் பெரும்பான்மையின் ஆட்சியும் இல்லை. தேர்தலை மட்டுமே ஜனநாயகமாக நீங்கள் பார்த்தால் வரக்கூடிய மாயை அது.
ஜனநாயகம் பெரும்பான்மையின் ஆட்சி அல்ல என்பதற்கு ஒரு உதாரணம் தரலாம். இந்தியாவில் 36 சதவீத ஓட்டு வாங்கிய கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கலாம். ஆனால், மாநிலத்தில் அதே கட்சி ஆட்சியில் இல்லை. மத்தியில் வேறு கட்சி ,மாநிலத்தில் வேறு கட்சி என்பதற்காக மாநில ஆட்சியை கலைத்துவிட முடியுமா? சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை வைத்து முயற்சி செய்யலாம். ஆனால், சட்டத்தில் அப்படிப்பட்ட ஓட்டைகள் கடந்த 60க்கும் மேற்பட்ட வருடங்களாக அடைபட்டுக்கொண்டே வருகின்றன.
மாநிலத்தில் ஒரு கட்சி, மாவட்டத்தில் வேறொரு கட்சி ஆட்சியிலிருக்கும். (சில மாநிலங்களில்) இதுதான் ஜனநாயகத்தை பரவலாக்கும் முயற்சி. எல்லா மட்டங்களிலும் அதிகாரத்தில் எல்லா பிரிவினரும் ஆட்சியில் இருக்கமுடிவதுதான் ஜனநாயகம்.
சர்வாதிகாரம் என்பது சிறுபான்மையின் ஆட்சியும் அல்ல. எந்த ஒரு சர்வாதிகாரமும் மக்களின் ஒப்புதல் இல்லாமல் ஆட்சியில் இருக்கவும் முடியாது. அப்படிப்பட்ட ஒரு அங்கீகாரத்தை மக்கள் தரவேண்டும் என்பதகாகத்தான் சில மாய்மாலங்கள் எழுதப்படுகின்றன. கடவுளின் பிரதிநிதியாக அவர் சொன்ன சட்டத்தை செயல்படுத்துகிறோம் என்ற ஈரானின் மத சர்வாதிகாரம், சோசலிஸ சமுதாயத்துக்காக சர்வாதிகாரம், ஆகியவை இப்படிப்பட்டவை. இவைகளிலிருந்து கவனமாக நாம் விலகியிருக்க வேண்டும்.
//->
அடிபபடைப் பிரச்சனைகளை விட்டுவிட்டு மேலோட்டமாக பேசுவது பயனற்ற வாதம். இந்திய மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்வதற்கான அதாவது 3 வேளை சாப்பாடு ஏற்றத்தாழ்வற்ற பொரளாதாரம் இப்படி... இவற்றை தீர்க்க உங்களது வழி என்ன? திட்டம் என்ன? மனிதனை மனிதன் கொல்லாத ஒரு வன்முறையற்ற மாற்று சமூகத் திட்டத்தை கூறுங்கள். நக்சல்பாரிகளின்அடிப்படைக் கோட்பாடு இவைதான். உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்கான ஏற்பாடுகள் துவங்கி... எல்லோருக்குமான சமத்துவம் உள்ள வாழ்க்கை. தீண்டாமை என்றும் சாதி என்றும் மனிதர்களை வாழும் சமூகத்திலேயே கீழானவர்களாக ஒடுக்கி வைத்திருக்கும் இந்த ஜனநாயகத்தைவிட சமத்துவமான வாழ்வு ஒரு சர்வாதிகாரத்தால்தான் சாத்தியம் எனில் அந்த சர்வாதிகாரம் ஆதரிக்கப்பட வேண்டியதே.
<-//
ஜனநாயகம் மக்களை ஒடுக்கவில்லை. ஜனநாயகம் அப்படிப்பட்ட நிலைகளிலிருந்து மக்களை விடுவிக்கிறது.
நக்ஸல்பாரிகளின் அடிப்படை கோட்பாடு, எதிர்காலத்தில் வரும் என்று அவர்கள் சொல்லும் சோசலிஸ சமுதாயத்திற்காக இன்றைக்கு நம்மை அவர்கள் செய்யும் வன்முறையை சகித்துக்கொள்ளச்சொல்லும் கோட்பாடு. அது முழுமையாக நிராகரிக்கப்படவேண்டியது.
//->
சமத்துவமற்ற மனிதனை மனிதன் சுரண்டுகிற தீண்டாமை துவங்கி அனைத்து சாதியக் கொடுமைகளும் ஒழிக்கப்பட்டு மதத்தின்பேரால் இனத்தின் பேரால் நடைபெறும் மனித அழிவுகள் அனைத்தும் நிறுத்தப்படும்வரை புரட்சியும் மக்கள் எழுச்சியும் வெவ்வேறு வடிவங்களில் வந்துகொண்டுதான் இருக்கும். காரணங்களைவிட்டுவிட்டு காரியங்களை பற்றி பேசுவதில் பயனில்லை. நக்சலபாரிகள் முன்வைக்கும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வழி உண்டா சொல்லுங்கள். பிரச்சனை நக்சல்பாரிகள் நல்லவர்களா? கெட்டவர்களா? கிரிமினல்களா? என்பதல்ல.. அவர்கள் உருவான காரணம் என்ன? அது தீர்க்கப்ட்டும் அவர்கள் தங்களது வன்முறையை தொடர்கிறார்களா? என்பதுதான். ஒடுக்கப்பட்டு கிடக்கும் ஆகக்கீழான மக்களைக்கூற மலம் அள்ளுதலை கூறினால் அதனை நக்கலுடன் அனுகும் உங்கள் அனுகுமுறைகள் தானெ அம்பலப்பட்டுவிட்டதை உணருங்கள் நீங்கள் யாருக்காக வாதாடகிறீர்கள் என்று.
<-//
மதத்தின் பேரால் நடக்கும் அழிவுகளின் காரணங்களும் நக்ஸல்பாரிகள் நடத்தும் அழிவுகளின் காரணங்களும் ஒன்றேதான்.
இப்போதைக்கு இருக்கும் சமூக அமைப்பு தவறானது என்று இவர்கள் கருதுகிறார்கள். இருவரும் தாங்கள் விரும்பும் ஒரு பொன்னுலகை கற்பனையில் கட்டுகிறார்கள். அதற்காக போரிட ஆயத்தமாகிறார்கள்.
அதற்காக இவர்களது பொன்னுலகுக்கு தடைக்கல் என்று அவர்கள் நினைக்கும் பிரிவினரை வன்முறை மூலம் அழித்தொழிக்க ஆயத்தமாகிறார்கள்.
//->
அதனால் இந்த விவாதமே உங்களை நீங்கள் நிரூபித்துக்கொள்வதற்கான ஒரு உத்திதான். அதற்காக அங்கீகாரம் தேடி அலைவதே இதில் வெளிப்படுகிறது. அதனால் இந்த விவாதத்தை அல்லது உங்கள் முன்முடிவுகளை தொடர்பவர்கள் தொடரட்டும். திரும்பவும் இது நேர விரயம்தான். நான் முன்பே கூறியபடி.. உங்களது இந்த விளையாட்டிற்கு நான் ஆளில்லை. ஒன்று செய்யுங்கள் உங்களது இந்த சமூகப்பணியை தொடர்ந்து செய்யுங்கள். சீனாவின் மாபெரும் மக்கள் தலைவர் அல்லது உங்களது பாணியில் சர்வாதிகாரி கூறியுள்ளார் "நூறு பூக்கள் மலரட்டும் நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்" என்று. அப்பொழுதுதான் மற்றவர்களுக்கும் தெளிவு பிறக்கும். உங்களது ஆழ்ந்த புலமையுடன் ஆன அமைதியான இந்த விவாதமுறைக்கு பாராட்டுக்கள். இந்த அமைதியான முறையிலேயே தொடர்ந்து எல்லாவற்றிற்கும் மறுப்பு கருத்துகள் வரிக்கு வரிக்கு எழுதுங்கள். தனிப்பதிவுகளாக போட்டு திரும்பவும் ஒன்டே மேட்சைத் துவங்காதீர்கள். இது ஒரு விவாத முறை அல்ல. மற்றவர்களுக்கு படம் காட்டவதற்கான ஒரு எளியமுறை அவ்வளவே. வாசிப்பவாக்ளுக்கு புரியும்.
<-//
"நூறு பூக்கள் மலரட்டும் நூறு கருத்துகள் முட்டி மோதட்டும்" என்று மாவோ சொன்னான். அவ்வாறு மாற்றுக்கருத்துக்கள் வந்ததும் எந்த கருத்து யாரிடமிருந்து வந்தது என்பதை அடையாளம் கண்டு அவர் என்ன செய்தார் என்பதையும் படியுங்கள். அப்படிப்பட்ட வாய்ப்பு இப்போது இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு இன்னும் வரவில்லை என்பதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டு, நான் எழுதியவற்றுக்கு பதில் எழுதுங்கள். வரவேற்கிறேன்.
நான் படம் காட்டி என்ன செய்யப்போகிறேன்? அல்லது என்னை நிரூபித்துக்கொண்டு என்ன செய்யபோகிறேன்?
//->
எனது பெயரைப்போட்டு தமிழ்மணத்தில் பரப்புரை செய்தமைக்கு நன்றி. தனிமனிதர்களை தாக்காத பதறாத உங்கள் எழுத்து முறைக்கு பாராட்டுகள். எனது முந்தைய பதிவில் உள்ள முன்னுரை உங்களை வருத்தப்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். மற்றபடி.. உங்கள் விவாதம் தொடர்ந்து கம்யூணிஸத்தையும் நக்சலிஸத்தையும் வேரடி மண்ணோடு ஒழித்துவிட்டால் அதைவிட சந்தோஷம் இந்த உலகில் வேறு என்னதான் இருக்கும் சொல்லுங்கள். அதன்பின் பாலாறு தேனாறுதான். அதை ஓவராகக் குடித்து இந்திய ஜனநாயகத்தில் மலச்சிக்கல் வராமல் எல்லோரும் கழிந்து தள்ள வேண்டியதுதான் பாக்கி.. இப்பொழுது நாம் எழுதிக் கொண்டிருப்பதைப் போலவும் இதற்கு வரப்போகும் பின்னோட்டங்களைப் போலவும்.

நன்றிகளுடன்.
12. November 2007 15:10
<-//
கம்யூனிஸத்தையும் நக்சலிஸத்தையும் ஒழிக்க முடியாது. கம்யூனிஸத்தை ஒழித்தால் மட்டுமே இந்தியாவில் பாலாறு தேனாறும் ஓடிவிடாது.
அப்படி ஓடவேண்டுமென்றால், மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டும். அப்படிப்பட்ட பொருளாதார சுதந்திரம் இந்திய மக்களுக்கு தற்போதுதான் மெல்ல மெல்ல கிடைக்கிறது. சுய தொழில் துவங்கவும், தங்கள் தொழிலை மேம்படுத்தவும், புதிய தொழில்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அரசாங்க கழுத்து நெறிப்பு இல்லாத ஒரு பொருளாதார சுதந்திரம் வேண்டும். அது முழுமையாக இன்னும் வரவில்லை. வரும்போது, இன்றைய பஞ்சம், ஏழ்மை, இயலாமை ஒழியும்.
அப்போது உண்மையிலேயே இந்தியாவின் உன்னதமான கண்டுபிடிப்பாளர்கள், உணவுப்பஞ்சத்தை ஒழிக்கவும், கல்வி பரப்பலுக்கும் உன்னதமான கண்டுபிடிப்புகளை மக்களிடம் தருவார்கள்.
நன்றி

Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...
Der Kommentar wurde von einem Blog-Administrator entfernt.
Anonym said...

மறுபடியும் அனானி-2
ஜமாலனைக் கிண்டல் செய்து இன்று எழுதிய என் பதிவை நான் வாபஸ் வாங்குகிறேன். தயவு செய்து அதை எடுத்து விடுங்கள். நன்றி.
மதித்து உரையாடுபவர்களை, அவர்கள் என்ன வன்முறை ஆதரவாளர்களாக இருந்தாலும் பதிலுக்கு மதிப்பது நல்லது என்றுதான் நான் கருதுகிறேன். அவர் மறுபடி பிரசங்கம் செய்ய வந்தால் நானும் மறு பிரசங்கம் செய்ய நேரும் என்பது தெளிவு.
அனானி-2

said...

நன்றி அனானி 2
உங்கள் விருப்பப்படியே முந்தைய இரண்டு பின்னூட்டங்களை நீக்கியுள்ளேன்.
நன்றி

Anonym said...

//அதன்பின் பாலாறு தேனாறுதான். அதை ஓவராகக் குடித்து இந்திய ஜனநாயகத்தில் மலச்சிக்கல் வராமல் எல்லோரும் கழிந்து தள்ள வேண்டியதுதான் பாக்கி.. //

இப்படி எழுதும் ஜமாலனுக்கும், பதட்டப்படாமலும், பொறுமையாகவும், மரியாதையுடனும் எழுதும் உங்களை பாராட்டவே வேண்டும்.

said...

Thanks for the kind words, Anony

Anonym said...

suuuuper post!

said...

பின்னூட்டங்களுக்கு நன்றி

ஜமாலன் இதற்கு பதிலெழுதியிருந்தால் இங்கே பதியலாமே?

நன்றி

Anonym said...

Super.
Please make these arguments a detailed article and publish it.

Regards

said...

நன்றி ராஜகுமார்
சிந்திக்கிறேன்

Anonym said...

Good analysis and sharp writeup!